flipkart discount sale search here.

Monday, 13 May 2019

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது..?

_*மகிழ்ச்சி!*_😄???
_எது மகிழ்ச்சி என்பது தொடர்பாக நிறைய கருத்துக்கள் உள்ளன!_

''மகிழ்ச்சி எங்கே இருக்கிறது..''?
...........................................

உலகில் பிறந்த எல்லாருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.மனிதன் பொருட்களில், பணத்தில், பதவியில், பட்டத்தில் என்று பல வகைகளில் மகிழ்ச்சியைத் தேடி அலை கின்றான்.

இதில் கிடைத்துவிடாதா அதில் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தோடும், ஆதங்கத்தோடும் இங்கும் அங்கும் அலைகின்றான்.

இறுதியில் அவனுக்குக் கிடைப்பது ஏமாற்றமே.
மகிழ்ச்சி என்பது வெளியே விலை கொடுத்து
வாங்கக் கூடிய பொருளோ, இடமோ அல்ல.
இது ஒவ்வொரு மனிதனின் கையிலும் உள்ளது.

இந்த உண்மையை மனிதன் எப்போது உணர்ந்து கொள்கின்றானோ,அப்போது அவன் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.

அப்போது அவனது மகிழ்ச்சியை அவனிடமிருந்து யாரும் எடுத்துக் கொள்ள முடியாது.

ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் குவிந்து கிடந்தன.ஆனால்,மகிழ்ச்சியும், நிம்மதியும்தான் இல்லை.

உள்ளூர்லதான் மகிழ்ச்சி கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்கும் என்று எண்ணி அதைத் தேடிப்போனான்…

ம்ஹூம் அங்கேயும் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு…

எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. பணப் பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடு வாங்களோங்கிற சந்தேகம்!

இதை மறந்தாவது தொலைக்கலாம்னு சரக்கு, போதைப் பொருள்னு சகலத்திலும் இறங்கிட்டான்.

ஆனா ,அதிலும் நிம்மதி கிடைக்கல…சீ போதும் இந்த வாழ்க்கை…இனி துறவறத்தில் இறங்கி சந்நியாசியா போயிடலாம் அமைதி கிடைக்கும்னு யாரோ சொல்ல, அவனும் துறவறத்தில் இறங்க முடிவு செய்தான்..

அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம்,எக்கச்சக்க பணம் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான்.

அப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்து  இருந்தார்.

அதைப் பார்த்த அந்த கோடீஸ்வரன்,அந்த மூட்டையை துறவியின் காலடில வச்சிட்டு,

“குருவே! இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு.இனி இவை எதுவும் எனக்கு வேணாம்.எனக்கு அமைதியும், மகிச்சியும்தான் வேணும்…அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க…, என்று சொல்லி அவரை கும்பிட்டான்.

எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட துறவி,

உடனே அந்த மூட்டையை வேகமா பிரிச்சுப் பாத்தார். அதில் கண்ணை தங்கமும் வைர வைடூரியங்களும் கட்டுக் கட்டா பணமும் இருந்தது…

துறவி சடார்னு, அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சார்.

அதைப் பாத்ததும் கோடீஸ்வரனுக்கு இன்னும் பேரதிர்ச்சி.

‘அடடா..இவன் பஞ்சத்துக்காக காவி கட்டிய போலி சாமியார் போலருக்கே’ன்னு பதறிட்டான்.கோபம் கோபமாக வந்தது. உடனே துறவியை துறத்த ஆரம்பிச்சிட்டான் நம்மாளு!

துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியல. துறவி சந்து பொந்தெல்லால் சர்வ சாதாரணமா ஓடறார்.தாவிக் குதிக்கிறார்…

ம்ஹூம். பணக்காரனால ஒண்ணுமே பண்ண முடியல.ஆனா துறவி எல்லா தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்னுட்டார்!

அந்த கோடீஸ்வரனும் சிறிது நேரத்தில் அங்கு வந்தார்.

என்னப்பா பயந்துட்டியா…இந்தா உன் சொத்து மூட்டை…நீயே வச்சுக்க என்று திருப்பிக் கொடுத்தார். சொத்து மூட்டை கையில் வந்ததும் கோடீஸ்வரன் அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...

ஒரே குதூகலமாயிட்டான்.முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடுது.இப்போது அந்த துறவி கேட்டார்…
“என்னப்பா…புதுசா சிரிக்கிற…இதுக்கு முன்னாடி இந்த செல்வமெல்லாம் எங்கே இருந்துச்சி உங்கிட்டதானே

ஆனால் ,அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல…இப்பவும் நீ வச்சிருக்கிறது அதே சொத்துதான்.ஆனா மகிழ்ச்சியும் நிம்மதியும் உன் முகத்தில் தெரியுது…!”என்று கூறி விட்டு, திரும்பிப் பார்க்காமல் நடந்தார்.

எல்லாம் புரிந்த தெளிவோடு வீடு திரும்பினான் செல்வந்தன்!

ஆம்.,நண்பர்களே.,

மகிழ்ச்சியை வேறு எங்கும் தேட வேண்டாம் அது நம்மிடத்தில்தான் இருக்கிறது.
அதை அடையாளம் காண்பதில் தான் நமது வெற்றியும் மன நிறைவும் சேர்கிறது.

இனிய நாளாக அமைய  வாழ்த்துகள் _💐👍🏼👍

Saturday, 11 May 2019

Mother's day quotes tamil

தாய் பாசம் உள்ளவர்களுக்கு இந்த கவிதை வலி புரியும்....

அம்மா...
நான் பிறந்து
விழுந்த போது...
உன் ( 👉 ) சேலைதான்
ஈரமானது...

நான் உறங்க...
உன் ( 👉 ) சேலைதான்
ஊஞ்சல் ஆனது..
.
நான் பால்
அருந்தும் போது...
உதட்டினை துடைத்தது
உன் (👉)சேலை தான்...

எனக்கு பால்
கொடுக்கும்போது...
உன் (👉)சேலை தான்
எனக்கு திரையானது...

நான் மழையில்
நனையாமல் இருக்க...
உன் (👉)சேலை
தான் குடையானது...

நீச்சல் பழக...
என் இடுப்பில் கட்டியதும்
உன் (👉)சேலை தான்...

மழையில் நனைந்த
என் தலையை...
துவட்டியதும்
உன் (👉)சேலை தான்...

மாம்பழம் தின்று
என் கை துடைத்ததும்
உன் (👉)சேலை தானம்மா...

ஆசிரியரின்
மிரட்டலுக்கு...
ஓடி ஒளிந்ததும்
உன் (👉)சேலைதான்...

அப்பா அடிக்க
வரும் போது...
என்னை ஒளித்து
வைத்ததும்...
உன் (👉)சேலை
தானம்மா...

அண்ணனுக்கு தெரியாமல்
மறைத்து வைத்து...
மிட்டாய் கொடுத்ததும்
உன் (👉)சேலை தான்...

காசு எடுத்தால் என்னை
கட்டி வைத்து அடித்ததும்...
உன் (👉)சேலை தான்...

தலை வலிக்கு ஒத்தடம்
கொடுத்ததும்...
உன் (👉) சேலை
தான் அம்மா...

அம்மா உன் (👉) சேலையை
தொட்டு பார்க்கிறேன்...

தொலைந்த இன்பத்தை
உன் கண்ணில் பார்க்கிறேன்...

மறு பிறவியிலும்
நீயே வேண்டுமென்று...
இறைவனிடம் கேட்கிறேன்
அம்மாவாக

*அன்னையர் தின வாழ்த்துக்கள்*

*நட்புடன் alliswell* ...

Thursday, 9 May 2019

Life story #37

நிறைவான வீடு

சீனக் கதை

சீனாவில் ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகியிருந்தது. எப்போதும் வீடு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், மருமகள்கள் தங்கள் தாய்வீட்டுக்குச் சென்றால், விரைவில் திரும்பி வர மாட்டார்கள்.

அன்றும் மருமகள்கள் தாய்வீடு செல்ல அனுமதி கேட்டனர்.  பெரியவர், “போய் வாருங்கள். வரும்போது நீங்கள் எனக்கு இரண்டு பொருட்களைக் கொண்டுவர வேண்டும். கொண்டு வராவிட்டால், மீண்டும் உங்கள் அம்மா வீடு செல்ல அனுமதிக்க மாட்டேன்” என்றார்.

“சரிங்க மாமா. என்ன வேணும், சொல்லுங்கள்?” என்றனர் இரு மருமகள்களும்.

“ஒரு காகிதத்தில் கொஞ்சம் காற்றை அடைத்துக் கொண்டு வரவேண்டும்” என்று ஒரு மருமகளிடமும், “காகிதத்தில் கொஞ்சம் தீயை கட்டிக் கொண்டுவர வேண்டும்” என்று இன்னொரு மருமகளிடமும் சொன்னார் பெரியவர்.

இதைக் கேட்டு மருமகள்கள் இருவரும் திகைத்தனர். சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டனர். தாய் வீட்டில் சந்தோஷமாகச் சில நாட்கள் இருந்தார்கள். வீடு திரும்ப வேண்டிய நாள் வந்ததும்தான் மாமனார் கேட்ட விஷயம் பற்றிய பயம் வந்தது.

இருவரும் கிளம்பினார்கள். வழியெங்கும் கவலையோடு புலம்பிக்கொண்டே நடந்தனர். அப்போது எருமை மீது சவாரி செய்துகொண்டு வந்த ஓர் இளம்பெண், உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார். இவர்களும் தங்கள் மாமனார் கேட்டதைச் சொன்னார்கள். அந்தப் பெண், “இவ்வளவுதானா, கவலைப்படாதீர்கள்” என்று சிரித்தார்.

முதல் மருமகளைப் பார்த்து, “ஒரு காகிதத்தில் விசிறி செய்து  கொடு. நீ ஒரு சிம்னி விளக்கை ஏற்றி, ஒரு காகிதத்தில் சுற்றி எடுத்துட்டுப் போ” என்றார்.

மருமகள்கள் இருவருக்கும் பிரச்சினை தீர்ந்ததில் மகிழ்ச்சி. அந்தப் பெண்ணுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

மாமனாரிடம் அந்தப் பெண் கூறியபடியே விசிறியையும், சிம்னி விளக்கையும் தந்தார்கள். அவர் ஆச்சரியப்பட்டார். இருவரும் வழியில் சந்தித்த அந்தப் பெண் பற்றிச் சொன்னார்கள்.

“இவ்வளவு புத்திசாலியான பெண்ணை, என் கடைசி மகனுக்கு மணம் முடிக்கப் போகிறேன்” என்றார் பெரியவர். அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்க ஆட்களை அனுப்பினார். கண்டுபிடித்துச் சொன்னதும், சம்பந்தம் பேசினார். திருமணம் இனிதே நடந்து முடிந்தது. வீட்டில் அனைத்தையும் பொறுப்பாகச் செய்தார் கடைசி மருமகள்.

பெரியவருக்கு மகிழ்ச்சி. நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார். எனவே தன் வீட்டு வாசலில், ‘இது நிறைவான வீடு’ என்று ஒரு பலகையை மாட்டி வைத்தார்.



சில காலம் கழித்து அந்த வழியே சென்ற ஒரு துறவி இந்தப் பலகையைப் படித்தார். ‘யார் இது, இவ்வளவு திமிராக எழுதி வைத்தது? இந்த வீட்டினருக்குப்  பாடம் புகட்டி, திமிரை அடக்கப் போகிறேன்’ என்று முடிவு செய்தார்.

வீட்டில் நுழைந்த அவரை, கடைசி மருமகள்தான்  வரவேற்றார். துறவி, “இது நிறைவான வீடாமே… அப்படியானால் எனக்கு இந்தச் சாலையின் நீளத்துக்கு ஒரு துணியை நெய்து கொடு. இல்லாவிட்டால் சபித்து விடுவேன்” என்றார்.

“கண்டிப்பாக நெய்கிறேன். சாலையின் இரு முனைகளையும் கண்டுபிடித்து, எவ்வளவு நீளம் என்று அளந்து தாங்கள் சொன்னால், அந்த அளவுக்கு நான் துணியை நெய்து கொடுக்கிறேன்” என்றார் மூன்றாவது மருமகள். அவர்கள் வீடு இருந்த சாலை எங்கோ வெகு தொலைவில் இருந்த தலைநகரத்திலிருந்து நாட்டின் எல்லைவரை சென்றது. அதன் ஆரம்பமும் முடிவும் யாருக்கும் தெரியாது என்பதால் துறவிக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

“சரி, வேண்டாம். கிணற்று நீர் அளவு எண்ணெய் ஆட்டிக் கொண்டுவா” என்றார் துறவி.

“தாங்கள் தயவு செய்து கிணற்றில் எத்தனை ஆழாக்கு நீர் உள்ளது என்று சொன்னால், உடனே அத்தனை ஆழாக்கு எண்ணெயை  ஆட்டித் தந்துவிடுகிறேன்” என்றார் மூன்றாவது மருமகள் பணிவோடு.

துறவிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சில நொடிகள் யோசித்தார். இந்தப் புத்திசாலிப் பெண்ணை மடக்குவது எளிதல்ல என்பதை உணர்ந்தார். யோசித்தபடியே, பறந்து வந்த ஒரு புறாவைச் சட்டென்று பிடித்தார்.

“நீ மிகவும் புத்திசாலியாக இருக்கிறாய். இந்தப் புறாவை நான் பறக்க விடப் போகிறேனா, இல்லை கூண்டுக்குள் அடைக்கப் போகிறேனா என்று சொல் பார்ப்போம்” என்றார் துறவி.

புத்திசாலி மருமகள் துறவியை வணங்கி, ”நீங்கள் முக்காலமும் அறிந்த ஞானி. வாசலில் நிற்கும் நான் இப்போது உள்ளே செல்லப் போகிறேனா, இல்லை தெருவில் இறங்கப் போகிறேனா என்று சொல்லுங்கள். நானும் உங்கள் கேள்விக்கு விடை தருகிறேன்” என்றார்.

துறவி அமைதியாக இருந்தார்.  “துறவியான தங்களுக்கே என் கேள்விக்கு விடை தெரியாதபோது, அனைத்தும் அறிந்த ஞானியான தங்களது கேள்விக்கு எனக்கு எப்படி விடை தெரியும்?” என்று கேட்டு மீண்டும் அவரை வணங்கினார் மூன்றாவது மருமகள்.

“நீ சொல்வதும் சரிதான். இந்த வீடு நிறைவான வீடுதான்” என்று சொல்லிவிட்டு, துறவி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

வாந்தி வருவது ஏன்?

வாந்தி வருவது ஏன்?

* வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. நோய் வருவதற்கான ஓர் அபாய அறிவிப்பு. குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

* உடலில் வாந்தி ஓர் அனிச்சைச் செயல் போல் ஏற்படுகிறது. மூளையின் பின்பகுதியில் உள்ள ‘முகுள’த்தில் வாந்தி மையம் உள்ளது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகிறது.

* நம் வயிற்றுக்குள் மோசமான பாக்டீரியாவோ, ரசாயனமோ புகுந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். இந்த விஷயத்தை இரைப்பைச் சுவரில் உள்ள சென்ஸார் செல்கள் உடனே உணர்ந்து, ‘வேகஸ்’ நரம்பு வழியாக முகுளத்துக்குத் தகவல் அனுப்பும்.

* வாந்தி எடுத்தால்தான் பிரச்சினை சரியாகும் என்று முகுளம் தீர்மானித்துவிட்டால், அந்தச் செய்தியை வாந்தி மையத்துக்கு அனுப்பிவைக்கும்.

* உடனே அது ‘வாந்தி எடு’, ‘வாந்தி எடு’ என்று வயிற்றை அவசரப்படுத்தும். இந்தக் கட்டளைகள் பிரெனிக் நரம்பு, வேகஸ் நரம்பு, தண்டுவட நரம்பு, பரிவு நரம்பு, மூளைமைய நரம்புகள் வழியாக வயிற்றுக்கு வந்து சேரும்.

* பேட்டரி சார்ஜ் தீர்ந்த கார் நடுவழியில் நின்றுபோனால், சம்பந்தமில்லாத நான்கு பேர் உதவிக்கு வந்து அதைத் தள்ளிவிடுகிற மாதிரி, இரைப்பை சிரமப்படும்போது, இரைப்பைக்குச் சம்பந்தமில்லாத வயிற்றுத் தசைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சிறுகுடலையும் இரைப்பையையும் அழுத்தும். அப்போது உணவுக் குழாயும் இரைப்பையும் இணையும் இடத்தில் உள்ள ‘வால்வு’ திறந்துகொள்ள, இரைப்பையில் உள்ள உணவு, நச்சு, அமிலம் எதுவானாலும் ‘ஓவ்’ என்ற பெரிய சத்தத்துடன் வெளியேற்றப்படும்.

* இதுதான் வாந்தி. பெரும்பாலும் வாந்தி வருவதற்கு முன்னால் வாயில் எச்சில் ஊறுவது, வயிற்றைப் புரட்டுவது, புளித்த ஏப்பம் போன்ற முன்னறிவிப்புகளை வயிறு நமக்குத் தெரிவிக்கும்.

💥வாந்தி நல்லதா, கெட்டதா?💥

* வயிற்றில் தேவையில்லாமல் இருக்கிற உணவையோ, நச்சுப்பொருளையோ வெளியே தள்ள ஒரு சில முறை வாந்தியெடுப்பது நல்லதுதான்.

* அதற்காக ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால், உடலில் இருக்கும் தண்ணீர்ச் சத்து குறைந்து, உடல் உலர்ந்து, ரத்த அழுத்தம் குறைந்துவிடும்.

* இதனால் தலைசுற்றல், மயக்கம் வரும். குறிப்பாக, குழந்தைகள் சில முறை வாந்தி எடுத்தாலே சோர்வடைந்துவிடுவார்கள். இது ஆபத்து.

💥முக்கியக் காரணங்கள்💥

* கெட்டுப்போன உணவைச் சாப்பிடுவது, ஒத்துக்கொள்ளாத உணவைச் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக உணவைச் சாப்பிடுவது, இரைப்பைப் புண், இரைப்பையில் துளை விழுவது, முன் சிறுகுடல் அடைப்பு, உணவுக் குழாய்ப் புற்றுநோய், இரைப்பைப் புற்று. வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, குடல்புழு, குடல்வால் அழற்சி, மஞ்சள் காமாலை, கணைய அழற்சி, பித்தப்பை பிரச்சினைகள், சிறுகுடல் அடைப்பு, சிறுகுடல் துளை, சிறுநீர்ப் பாதை அழற்சி, சிறுநீரகக் கல், வலி நிவாரணி மாத்திரைகள், புற்றுநோய் மருந்துகள் போன்றவை வாந்தியை ஏற்படுத்தும்.

💥காதும் ஒரு காரணம்தான்!💥

* காதடைப்பு, காது இரைச்சல், காதில் சீழ் போன்ற காதுப் பிரச்சினைகளாலும் வாந்தி வரும். காதில் ‘வெஸ்டிபுலர் அப்பாரட்டஸ்’ என்று ஓர் அமைப்பு உள்ளது.

* இதுதான் நம்மை நடக்கவைக்கிறது; உட்காரவைக்கிறது; உடலைச் சமநிலைப்படுத்துகிறது, இந்த அமைப்பு தூண்டப்படும்போது வாந்தி வரும். இதனால்தான் பேருந்தில் பயணிக்கும்போது, கடல் பயணம்/விமானப் பயணங் களின்போது வாந்தி வருகிறது.

💥கர்ப்பகால வாந்தி!💥

* கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களில் சில ஹார்மோன்களின் அளவு திடீர் திடீரென்று ஏறி இறங்குவதால், மசக்கை வாந்தி வருகிறது. முதல் நாள் இரவில் நிறைய மது குடித்தவர்களுக்கு மறுநாள் எழுந்திருக்கும்போது வாந்தி வருவதுண்டு.

* சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப கட்டத்தில் வாந்தி வருகிறது. தவிர, மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் வாந்தி வரும். ஒற்றைத் தலைவலி, தலையில் அடிபடுதல், மூளையில் கட்டி, மூளை நீர் அழுத்தம் போன்றவற்றாலும் வாந்தி ஏற்படும். பூச்சிக் கடி, பாம்புக் கடி போன்ற விஷக் கடிகளின்போதும் வாந்தி வரும். ஊசி மருந்து, மாத்திரை அலர்ஜி ஆனாலும் வாந்தி வருவது நிச்சயம்.

💥உளவியல் காரணங்கள்💥

* சிலருக்குக் கவலை, கலக்கம், பயம், பதற்றம், பரபரப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் வாந்தி உண்டாவது வழக்கம். இந்த வாந்தி பெரும்பாலும் காலையில் எழுந்தவுடன் அல்லது காலை உணவு சாப்பிட்ட பின்பு ஏற்படும்.

* பகல் நேரப் பணிகளில் பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பயப்படுபவர்களுக்கு இம்மாதிரி வாந்தி வரும். உதாரணமாக, பள்ளிக்குச் செல்லப் பயப்படும் குழந்தைகள் காலையில் சாப்பிட்டதும் வாந்தி எடுப்பது இவ்வகையைச் சேர்ந்தது.

💥சின்னச் சின்னக் காரணங்கள்💥

* பார்வை, நுகர்தல், தொடுதல் போன்றவையும் வாந்தியை வரவழைக்கும். பள்ளி/கல்லூரி விடுதிகளில் பல்லி விழுந்த பாலைப் பார்த்தால் மாணவர்கள் எல்லோருக்கும் வாந்தி வருவது, துர்நாற்றம் வீசும் இடங்களைக் கடக்கும்போது உண்டாகும் வாந்தி, பல் தேய்க்கும்போது பல்துலக்கித் தொண்டையைத் தொட்டுவிட்டால் வாந்தி வருவது போன்றவை இதற்குச் சில உதாரணங்கள்.

💥என்ன செய்யலாம்?💥

* வாந்தியை நிறுத்துவதற்குப் பல மருந்துகள் உள்ளன. என்றாலும், வாந்திக்கு என்ன காரணம் என்று தெரிந்து, அதற்குரிய சிகிச்சையைப் பெற்றால்தான் வாந்தி சரியாகும். அதற்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.

💥வாந்தியைத் தடுக்க வழி!💥

உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவையும் கெட்டுப்போன உணவையும் சாப்பிடாதீர்கள்.அவசர அவசரமாகச் சாப்பிடாதீர்கள்.

* அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடாதீர்கள்.அஜீரணத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிற கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த நொறுக்குத் தீனிகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

* வாந்தி எடுத்து உடல் நீர்ச்சத்து இழப்பதைத் தடுக்க, ‘ஓ.ஆர்.எஸ்’ எனப்படும் உப்பு சர்க்கரைக் கரைசலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம். அல்லது காய்ச்சி ஆறவைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் சர்க்கரையையும் 5 கிராம் உப்பையும் கலந்து ஒவ்வொரு டீஸ்பூனாகக் குடிக்கலாம்.

* பயண வாந்திக் கோளாறு உள்ளவர்கள் பேருந்துப் பயணம் செய்வதற்கு அரை மணி நேரம் முன்பு ‘அவோமின்’ போன்ற வாந்தியைத் தடுக்கும் மாத்திரையை டாக்டர் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்


*என்றும் அன்புடன்... #ALLISWELL