flipkart discount sale search here.

Monday, 14 August 2017

குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948...

குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948:
இந்த சட்டத்தில் 1986-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது.

இந்தியாவில் குறைந்தபட்ச ஊதியம் வரையறுத்தலின் வரலாறு
1943, 1944 ல் தொழிலாளர் நிலைக் குழுவின் மூன்றாவது மற்றும் நான்காவது கூட்டங்கள் நடத்தப்பட்டு அவற்றைத் தொடர்ந்து அடுத்தடுத்து முறையே 1943, 1944 மற்றும் 1945 இல் முத்தரப்பு தொழிலாளர் மாநாடுகளில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் தேவை விவாதிக்கப்பட்டது. ஏப்ரல் 11, 1946 அன்று, ஒரு குறைந்தபட்ச ஊதிய மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது மார்ச் 1948-இல் ஒரு சட்டமாக ஆக்கப்பட்டது.
நவம்பர், 1948-இல், நியாயமான ஊதியத்திற்காக, அரசாங்கம் ஒரு முத்தரப்புக் குழுவை நியமனம் செய்தது. அக்குழு, முதலாளிகள், ஊழியர்கள் மற்றும் அரசின் பிரதிநிதிகளைக் கொண்டிருந்தது. உழைப்பிற்கான நியாயமான ஊதியத்தைப் பற்றி விசாரித்து அறிக்கையை தயாரிப்பதுதான் அவர்களின் பணியாகத் தரப்பட்டது.
நியாய ஊதியக் குழு மூன்று வெவ்வேறு நிலைகளில் ஊதியங்களை வரையறுத்தது. அதாவது; (i) வாழ்வதற்கான ஊதியம் (ii) நியாயமான ஊதியம் (iii) குறைந்தபட்ச ஊதியம்.
சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் என்பது, 1948-இல் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின், தகுந்த செயல்முறை விதிகளின் படி நிர்ணயிக்கப்படுகிறது. அது எந்தெந்த வேலைகளுக்கு பொருந்தும் என்பது அந்த சட்டத்தின் அட்டவணையில்  பட்டியலிடப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் தங்களது சொந்த அட்டவணையை உருவாக்கிக் கொண்டன. இந்த அட்டவணையை உருவாக்கியதன் மூலம், முதலாளி வர்க்கமும் அதன் அரசாங்கங்களும் இந்த சட்டத்தின் வரையறையிலிருந்து பெரும் பகுதி தொழிலாளர்களை ஒதுக்கி வெளியே தள்ளி வைத்திருக்கின்றனர். எனவே குறைந்தபட்ச ஊதிய சட்டம் எவ்வித விதிவிலக்கு இல்லாமல் அனைத்து தொழிலாளர்களுக்கும் இருக்க வேண்டும் என்று தொழிலாளி வர்க்கம் கோரி வருகிறது.
குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் அடுத்த மைல்கல், ஜூலை 1957 ல் புது தில்லியில் நடைபெற்ற இந்திய தொழிலாளர் மாநாட்டின் 15-ஆவது அமர்வு ஆகும். குறைந்தபட்ச ஊதியம், தேவை அடிப்படையிலானதும் அது தொழிற்சாலைத் தொழிலாளிக்கு குறைந்தபட்ச மனிதத் தேவைகளை உறுதி செய்வதாகவும் இருக்க வேண்டும் என்னும் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதலாளி வர்க்கமும் காங்கிரஸ் கட்சியும் "சோசலிச பாணி சமுதாயத்தை" ஊக்குவித்து வந்த நேரத்திலும், போர்க்குணமிக்க தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயப் பிரிவினரின் ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொண்டிருந்த அந்த நேரத்திலும் தான் இந்த இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் 15-ஆவது அமர்வு நடத்தப்பட்டது. ஒரு சமூக புரட்சி இல்லாமல் பாராளுமன்றம் மூலம் அமைதியாக சோசலிசத்தை அடையலாம் என்ற மாயையைக்கு கம்யூனிஸ்ட் கட்சி பலியாகி, "முதலாளித்துவம் அல்லாத" வளர்ச்சிப் பாதை என்ற பிரச்சாரத்தை அது பரப்பத் தொடங்கியிருந்த காலமாகும் அது.
இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் 15-ஆவது அமர்வின் குறைந்தபட்ச ஊதியம் மீதான தீர்மானம் 56 ஆண்டுகளுக்கு பிறகும் இன்று வரை நிறைவேற்றப் படவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் நம் நாட்டில் முதலாளித்துவம் பன்மடங்கு வளர்ந்துவிட்டது. சமூகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒரு தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தினரின் தேவைகள் மாறிவிட்டன. 56 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தொழிலாளர் மாநாட்டின் 15-ஆவது அமர்வில் வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தால், நவீன தொழிலாளியின் மனிதத் தேவைகளை நிறைவேற்ற முடியாது. உண்மையில், இந்திய தொழிலாளர் மாநாட்டின் 15-ஆவது அமர்வு தீர்மானத்தின் அடிப்படையில் கணக்கிட்டால் வரும் தொகையைக் காட்டிலும், இன்றுள்ள குறைந்தபட்ச ஊதியம் மிகவும் குறைவாகவே உள்ளது.
தில்லியில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தைச் சேர்ந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், இந்திய தொழிலாளர் மாநாட்டின் 15-ஆவது அமர்வின் தீர்மானத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குமாறு தொழிலாளர்கள் சார்பில் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்திடம் கோரினர். அப்போது, அக்குழுவிடம் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறிய கருத்துக்களிலிருந்து முதலாளி வர்க்கம் மற்றும் அதன் அரசாங்களின் தொழிலாளர்கள் மீதான அணுகுமுறையைக் காணலாம். தொழிற்சங்க தலைவர்கள், இந்திய தொழிலாளர் மாநாட்டின் 15-ஆவது அமர்வின் தீர்மானத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ 15,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்கும் போது, திருமதி தீட்சித் கூறினார் "தொழிலாளர்கள் இறைச்சி, முட்டையெல்லாம் சாப்பிடுவதில்லை, மேலும் அவர்கள் சேரிகளில் வாழ்கிறார்கள். ஆகையினால், அரசாங்கங்களின் 'குறைந்த செலவிலான வீடுகள் திட்டங்களின்' படி வீட்டுச் செலவுகளை அவர்கள் கேட்க முடியாது."!
குழந்தைகள் கல்வி, மருத்துவத் தேவைகள், திருவிழாக்களும் சடங்குகளும் உள்ளிட்ட குறைந்தபட்ச பொழுதுபோக்கு, முதுமைக்கான ஒதுக்கீடு, திருமணத்திற்கான ஒதுக்கீடு போன்றவற்றிற்காக மேலும் 25 சதவீதம் இருக்கும்படியாக குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும் என்று 1991 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது. குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்த அரசாங்கங்களும் இந்த தீர்ப்பை மிகவும் அப்பட்டமாகவே மீறி வருகின்றனர்.
தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் திட்டத்தை அறிமுகப்படுத்திய போது, முதலாளி வர்க்கமும் அதன் அரசாங்கங்களும் தொழிலாளி வர்க்கம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம், உரிமைகள் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியது. 1992-இல் நடைபெற்ற இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் 30-ஆவது அமர்வில், "நடைமுறைக்கு ஒப்பாத வகையில் குறைந்தபட்ச ஊதியத்தை அதிக அளவில்" நிர்ணயிக்கும் போக்கு உள்ளதாக அவர்கள் பேசியிருக்கிறார்கள். சமுதாயத்திலும் தொழிலாளர்களிடமும் உள்ள வளர்ச்சியையும் மாற்றங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு குறைந்தபட்ச ஊதிய வரையறையை திருத்தி மாற்றங்கள் செய்யப்படவில்லை. திட்டமிட்ட முறையில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் தாக்கப்பட்டு வருகிறது.
இந்த காலக் கட்டத்தில், அரசாங்கம் "தேசிய தரைமட்ட குறைந்தபட்ச ஊதியம்" என்ற கோட்பாட்டை வெளியிட்டது. நாட்டின் எந்த பகுதியிலுமுள்ள எந்த நிறுவனமும் ஒப்புக்கொள்ளும் அடிமட்ட குறைந்தபட்ச ஊதியமென இது வரையறுக்கப்பட்டது. இந்தக் கருத்தானது தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை மேலும் குறைப்பதற்காகவே முன்வைக்கப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் ஒரு குறைந்த பட்ச தரம் இருக்க வேண்டும் என்ற பெயரில் இது  முன்வைக்கப்பட்டது. இன்று கிராமப்புற வேலை உத்திரவாத சட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் தான் "தேசிய தரைமட்ட குறைந்தபட்ச ஊதியமாக" இருக்கிறது. ஜூன் 2013 ல் 45 வது இந்திய தொழிலாளர் மாநாட்டில் பேசிய பிரதமர், "தேசிய தரைமட்ட குறைந்தபட்ச ஊதிய"-த்தை கொண்டு வருவதற்காக குறைந்தபட்ச ஊதிய சட்டத்தைத் திருத்தப்போவதாகக் கூறினார். குறைந்தபட்ச ஊதியமாக என்ன இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு புதிய வரையறையைக் கோரும் தொழிலாளி வர்க்கத்தின் கவனத்தை திசை திருப்புவதே இதன் நோக்கமாகும்.

No comments:

Post a Comment