flipkart discount sale search here.

Wednesday 27 September 2017

ஒரே ஒரு வரம்தான் கேட்க வேண்டும்...

ஒரு ஊரில் ஒரு ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்கு கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகுநாட்களாக குழந்தையும் இல்லை.*

*ஒருநாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக்கிடந்த பெரிய மீனொன்று அவனைப்பார்த்து கெஞ்சியது:*

*"மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரியஅலையில் சிக்கி இந்த கரைப்பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்தமுடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே, என்னை பத்திரமாக ஆழ்கடலுக்கு கொண்டுபோய் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்" என்றது*

*மீனவன் அந்த மீனைத்தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகை செலுத்திக்கொண்டு போய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்கமுடியவில்லை. எனவே அவன் சொன்னான்:*

*"மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச்சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன்" என்றான்*

*மீனும், "நீ ஒரேஒரு வரம்தான் கேட்கவேண்டும்'' என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச்சென்றது. மீனவன் வீட்டுக்கு சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக்கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான்.*

*அவனது தந்தை கூறினார்:*

*"மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக்குடிசையில் தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்லவீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்...'' என்றார்*

*அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்:*

*"மகனே, எனக்கு கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெறவேண்டும் என்று அந்த மீனிடம் கேள்...'' என்றார்*

*கடைசியாக மனைவி கேட்டாள்:*

*நமக்குத்திருமணம் ஆகி பலவருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒருகுழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்" என்றாள்*

*நன்கு யோசித்த மீனவன், மறுநாள், அந்த கடலுக்குச்சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவியின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்?*






*விடை: "என் மகன் கீழே விளையாடி கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழவேண்டும்'' என்பதுதான் அவன் கேட்ட வரம்.*




*நீதி:*

*உங்கள் உடன் வாழ்பவர்களின் மீது உங்களுக்கு ஆழமான அன்பும் அக்கறையும் பாசமும் இருப்பின்.. அந்த எண்ணமானது, உங்களை அறியாமலேயே உங்கள் புத்திகூர்மையையும், முடிவெடுக்கும் திறமையையும், இயல்பாகவே வெளிப்படுத்தும் என்பதே உலகம் கண்ட உண்மை.. இதற்கு நமது மெய்ஞானிகளும் விஞ்ஞானிகளும் கூட சாட்சி..*


No comments:

Post a Comment